Wednesday, August 3, 2011

இன்று ஆடிப்பெருக்கு: காவிரி பெண்ணே வாழ்க!



ஆடிப்பெருக்கு நாயகர் ரங்கநாதரை இந்த பிரார்த்தனையைச் சொல்லி இன்று வணங்குவோமே!

* காவிரிநதியின் நடுவில், ஏழுமதில்களால் சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில், தாமரை மொட்டுப் போன்ற அழகான விமானத்தின் கீழ், ஆதிசேஷன் என்னும் மிருதுவான கட்டிலில் யோகநித்திரையில் இருக்கும் ரங்கநாதரே! உம்மை வணங்குகிறேன்.

* ராமாவதார காலத்தில், சிற்றன்னையின் சொல்கேட்டு காட்டில் நடந்ததாலும், வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்ததாலும் ஏற்பட்ட
களைப்பு நீங்க காவிரிக்கரையில் அறிதுயில் கொள்கிறாயோ! துயில் நீங்கி எழுந்திருந்து உன் களைப்புக்கான காரணத்தை என்னிடம் சொல்வாயாக.
* அழகாக யோகநித்திரையில் ஆழ்ந்தவரே! இடது கையை இடுப்பில் வைத்தவரே! ஸ்ரீதேவி, பூதேவியால் பூஜிக்கப்படும் திருப்பாதங்களை உடையவரே! காவிரியின் நடுவில் வீற்றிருக்கும் காவலரே! ரங்கநாதப்பெருமானே! உம்மை வணங்குகிறேன்.

* காவிரியில் நீராடும் புண்ணியம் எனக்கு எப்போது கிடைக்கும்? பசுமையான காவிரிக்கரையோரம் வாழும் பாக்கியம் எப்போது கிடைக்கும்? புண்ணிய மிக்க காவிரிகரையில் துயிலும் செந்தாமரைக் கண்களைக் கொண்ட ஸ்ரீரங்கநாதா! உம்மை கண்குளிர சேவிக்கும் பாக்கியம் எப்போது எனக்கு கிடைக்கும்?

* கஸ்தூரி திலகம் அணிந்தவரே! காதுவரை நீண்ட கண்களைக் கொண்டவரே! வைரம், முத்து இழைத்த ஆபரணங்களில் பிரகாசிப்பவரே! தரிசிக்கும் பக்தர்களின் உள்ளத்தை வசீகரிப்பவரே! தாமரை மலருக்கு ஈடான திருமுகத்தால் அருள்செய்பவரே! புண்ணிய நதியான காவிரியின் நடுவில் பள்ளி கொண்டவரே! நான் உம்மைத் தரிசிக்கும் நாள் எந்நாளோ?

* தேவேந்திரனின் நந்தவனத்தில் அமிர்த பானத்தைக் குடிக்கும் பாக்கியம் எனக்கு தேவையில்லை. காவிரிக்கரையோரம், நீ குடிகொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் நகரவீதியில் நாயாக என்னை அலையச் செய்தால் போதும். அதையே பாக்கியமாகக் கருதுவேன்!

ஆடிப்பெருக்கு நாயகர்:காவிரிநதியின் முதல் தீவாகத் திகழ்வது ஸ்ரீரங்கப்பட்டணம். இங்கே ரங்கநாதப்பெருமாள் அருள் செய்கிறார். ஆடிப்பெருக்கு நாயகரான அவரை, இந்த நன்னாளில், இங்கிருந்தபடியே தரிசிக்கும் பேறு பெறுவோம். தல வரலாறு: சப்தரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்கு வந்து பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். சுவாமி அவருக்கு சயனகோலத்தில் காட்சி தந்தார். பெருமாளிடம் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி வேண்டிக் கொண்டார். அத்தலத்தில் ஒரு புற்றின் மத்தியில் தனது வடிவம் இருப்பதாகவும், அச்சிலையைப் பிரதிஷ்டை செய்யும்படியும் சுவாமி கூறினார். கவுதமரும் புற்றில் இருந்த பெருமாளைக் கண்டெடுத்து "ரங்கநாதர் என திருநாமமிட்டு இங்கே பிரதிஷ்டை செய்தார். பிரம்மா இங்கு "பிரம்மானந்த விமானத்தை அமைத்தார். "ரங்கம் என்றால் "ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி.

பெருமாளுடன் காவிரி: பூலோகத்தில் உள்ள புண்ணிய நதிகள், தங்களிடம் சேர்ந்த பாவங்களை ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடிப் போக்கிக் கொண்டன. பாவங்கள் தன்னில் கரைந்ததால், காவிரி கோரவடிவம் பெற்றாள். தன் பாவம் தீர ரங்கநாதரை வழிபட்டாள். அவர் காவிரிக்கு காட்சியளித்து பாவ விமோசனம் கொடுத்தார். மேலும், தனது திருப்பாத தரிசனத்தை அவளுக்கு நிரந்தரமாக தரும்வகையில், தன் காலடியில் இருக்க அனுமதித்தார். இக்கோயிலில் ரங்கநாதர் யோக சயனத்தில் காட்சி தருகிறார். அருகில் அன்னை காவிரி கையில் மலருடன் அமர்ந்திருக்கிறாள். ஆடிப்பெருக்கன்று சுவாமி காவிரிக்கு எழுந்தருள்கிறார். அப்போது சுவாமி சார்பில், புடவை, அரிசி, வெல்லம், வளையல், மஞ்சள், குங்குமம், பூ ஆகிய மங்கலப்பொருட்கள் நதியில் விடப்படுகிறது. ரங்கநாதருக்கு மாலையிட்டது போல, காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்கிறது. இந்த இடம் தீவு போல் உள்ளது. ரங்கநாதர் வாசம் செய்யும் தலம் என்பதால் இவ்வூர் "ஸ்ரீரங்கப்பட்டணம் என்று அழைக்கப்படுகிறது.

ஆதிரங்கம்: ரங்கநாதருடன் ஸ்ரீதேவியோ, பூதேவியோ, நாபிக்கமலத்தில் பிரம்மாவோ இல்லை. பாதத்திற்கு நேரே கவுதமர் நிற்கிறார். கவுதமருக்கு பெருமாள் காட்சி தந்த நிகழ்ச்சி சித்திரை மாத வளர்பிறை சப்தமியன்று, "ரங்க ஜெயந்தி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி ரத்தினகிரீடம் அணிந்து உலா செல்கிறார். இந்நாளிலும், கன்னட வருடப்பிறப்பு, தீபாவளி திருவிழாக்களில் மட்டுமே மூலவருக்கு திருமஞ்சனம்(அபிஷேகம்) செய்யப்படுகிறது. காவிரி பாயும் வழியில் அதன் மத்தியில் தீவுபோல் அமைந்த மூன்று தலங்களில் பெருமாள் ரங்கநாதராகக் காட்சியளிக்கிறார். அதில் இது முதல் தலம் என்பதால் இதனை "ஆதிரங்கம் என்கிறார்கள். இங்கிருந்து 70கி.மீ., தூரத்தில் உள்ள சிவசமுத்திரம் ரங்கநாதர் கோயில் "மத்திரங்கம் என்றும், திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் "அந்திரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர், சுதர்சனர், கஜேந்திரவரதர், வெங்கடாஜலபதி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் சந்நிதிகள் உள்ளன. சந்நிதி முகப்பில் "சதுர்விம்சதி கம்பம் என்னும் இரண்டு தூண்களில் பெருமாளின் பிரதானமான 24 வடிவங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது.
மகரசங்கராந்திக்கு சொர்க்கவாசல்: பெருமாள் தலங்களில் மார்கழி வைகுண்ட ஏகாதசியன்று, சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், இங்கு ரங்கநாதர் மகரசங்கராந்தியன்று(பொங்கல்) மாலையில் சொர்க்கவாசல் கடக்கிறார்.
இவ்விழா 9 நாட்கள் நடக்கிறது. அன்று மூலவர் வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் காட்சி தருகிறார். மறுநாள் தேரோட்டம் நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியன்று விசேஷ பூஜை மட்டும் நடக்கிறது. தை ரதசப்தமியை ஒட்டியும் ஒன்பது நாள் விழா நடத்தப்படுகிறது. விழாவின் ஏழாம்நாள் சூரியோதய நேரத்தில் பெருமாள் "சூரியமண்டலம் என்னும் வாகனத்தில் எழுந்தருளி, பின்பு தேரில் புறப்பாடாகிறார். இவ்வாறு ஒரே மாதத்தில் இங்கு இரண்டு பிரம்மோற்ஸவம் நடப்பது விசேஷம்.
வைகாசி பவுர்ணமியில் கருடசேவை, ஆனி சித்திரை நட்சத்திரத்தில் சுதர்சனர் ஜென்ம நட்சத்திர பூஜை, ஆடியில் ஊஞ்சல் உற்ஸவம், ஆடிப்பூரம், நவராத்திரி, கருடஜெயந்தி ஆகியவையும் நடத்தப்படுகிறது.இருப்பிடம்: பெங்களூருவில் இருந்து மைசூரு செல்லும் வழியில் 125 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. (மைசூருவில் இருந்து 15கி.மீ.,) பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
திறக்கும் நேரம்: காலை7.30- 1.30மணி, மாலை4-8 மணி வரைபோன்: 08236- 252 273.

ஆடிப்பெருக்கின் முக்கியத்துவம்:புனித நீராடலுக்குரிய நாட்களில் ஒன்றாக ஆடிப்பெருக்கு அமைந்துள்ளது. உலகின் அடிப்படைத் தேவை தண்ணீர். இதையே "நீர் இன்றி அமையாது உலகு என்கிறது தமிழ்வேதம் திருக்குறள். ஆன்மிக வாழ்விலும் நீருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. நதியை தாயாக மதித்து முன்னோர்கள் வணங்கினர். மனிதனின் வாழ்நாள் முழுவதும் நீரால் செய்யப்படும் சடங்குகளை உருவாக்கினர். பிறந்ததும் குளிக்கும் குழந்தை, வயது முதிர்ந்து இறந்த பின்னும் நீராடிய பிறகே மண்ணுக்குள் செல்கிறது. இதனால் தான் கோயில்களில் உள்ள குளங்களை புனிதமானதாக மதித்து அதன் நீரை "தீர்த்தம் என்று மரியாதையுடன் குறிப்பிட்டனர். கும்பாபிஷேகவிழாவில் கோபுர கலசங்களை புண்ணிய நதிகளின் தீர்த்தத்தாலேயே அபிஷேகம் செய்கின்றனர். மன்னர்களின் பட்டாபிஷேகத்தின் போதும் புனித தீர்த்தத்தால் நீராட்டும் வழக்கம் இருந்தது. பெண்கள் பூப்பெய்தும் விழாவை "பூப்புனித நீராடல் என்று சொல்வது வழக்கம். வாழ்நாளில் ஒருமுறையாவது காசி சென்று, புனித கங்கையில் நீராடவேண்டும் என்பதையும், ஆடிப்பெருக்கன்று காவிரியில் நீராடுவதையும் நியதியாகக் கொண்டிருக்கின்றனர்.

சுமங்கலி பாக்கியம் தரும் வழிபாடு:ஆடிப்பெருக்கு என்றதுமே காவிரிக்கரை நினைவுக்கு வந்து விடும். காவிரி தீர்த்தத்தில் நீராட ஆடிப்பெருக்கு சிறப்பானதாகும். கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடுவோரின் முன்வினைப் பாவங்கள் நீங்கும் என்பர். திருச்சி, ஸ்ரீரங்கம், மயிலாடுதுறை, திருவையாறு ஆகிய கோயில் ஸ்தலங்களில் பாயும் காவிரியில் மக்கள் புனித நீராடுவர். காவிரித்தாய்க்கு மங்கல திரவியங்களான பூக்கள், புதுச்சேலை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை சமர்ப்பணம் செய்வர். புதுமணதம்பதியர் நீராடி புதுமஞ்சள்கயிறு மாற்றிக் கொள்வர். பெருகி ஓடும் காவிரி நீரைப் போல வாழ்விலும் வளம் பொங்கவேண்டும் என்பதே இந்நீராடலின் நோக்கம். காவிரித்தாயின் அருளால் தீர்க்கசுமங்கலி பாக்கியமும், வளமான வாழ்வும் உண்டாகும் என்பது ஐதீகம்.

ஒருவருடம் குளித்தபலன்:தஞ்சையில் இருந்து 11கி.மீ., தூரத்தில் உள்ள தலம் திருவையாறு. காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆகிய ஐந்து நதிகளும் இத்தலத்தின் வழியாகச் செல்வதால் "ஐயாறு என்ற பெயர் ஏற்பட்டது. இறைவனுக்கும் "ஐயாறப்பர் என்று பெயர். இக்கோயிலில் காவிரியாறே தீர்த்தமாக விளங்குகிறது. திருவையாறில் "பூசைப்படித்துறை புகழ்பெற்றதாகும். இங்கு ஒருமுறை நீராடினால் காவிரி பாயும் மற்ற தலங்களில் எல்லாம் ஓராண்டு குளித்த பலன் கிடைக்கும் என்று தலவரலாறு கூறுகிறது. ஆடிப்பெருக்கு நாளில் நீராட அற்புதமான திருத்தலம் திருவையாறு.

குருவி ராமேஸ்வர தீர்த்தம்:திருவாரூர் அருகில் உள்ளது குருவி ராமேஸ்வரம். இவ்வூருக்கு முக்கூடல் தீர்த்தம், திருப்பள்ளி முக்கூடல் என்ற புராணப் பெயர்களும் உண்டு. முக்கூடல்நாதர் என்ற பெயரில் சிவபெருமான் இங்கு அருள்பாலிக்கிறார். திருநாவுக்கரசர் இத்தலத்தை தேவாரத்தில் பாடியுள்ளார். காசி, கங்கை, ராமேஸ்வரம் போன்ற புனித தீர்த்தங்களில் நீராடிய பலனைப் பெறுவதற்காக இறைவனால் இத்தல தீர்த்தம் உண்டாக்கப்பட்டதாக ஐதீகம். முக்கூடல் என்பதால், திரிவேணி சங்கமத்திற்கு நிகரானதாகவும் கூறுவர். சேதுக்கரையில் நீராடியதைப் போல 16மடங்கு பலன் தருவதால் இதற்கு "ஷோடசசேது என்ற பெயரும் உண்டு.